ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார்

  • 29 செப்டம்பர் 2014

தமிழ்நாட்டின் 17வது முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

Image caption பதவியேற்கிறார் பன்னீர்செல்வம்

திங்கட்கிழமையன்று பிற்பகல் ஆளுனர் மாளிகையில் நடந்த எளிய பதவியேற்பு விழாவில் அவருக்கும், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சனிக்கிழமை வரை முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கர்நாடகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார்.

இதற்குப் பின் ஞாயிற்றுக் கிழமையன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். இதற்குப் பின் புதிய அமைச்சரவையை அமைக்கும்படி ஆளுனர் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

திங்கட்கிழமையன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஓ. பன்னீர்செல்வமும் பிற எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அதற்குப் பின் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த அனைத்து 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அழுதபடி பதவியேற்றனர்

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்கள் பதவியேற்கும்போது, கண்ணீர் மல்கப் பதவியேற்றனர். சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி கதறிக்கதறி அழுதார்.

முதல்வர் பன்னீர் செல்வம் நிதித் துறை தவிர, உள்துறை, காவல்துறை, நிதி, திட்டமிடுதல், குடிமைப்பணி ஆகிய துறைகளைத் தன் வசம் வைத்துக்கொண்டுள்ளார். பிற அமைச்சர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்த பொறுப்புகளே அளிக்கப்பட்டுள்ளன.

ஓ. பன்னீர்செல்வம் 2001ஆம் ஆண்டில், இதே போன்ற சூழலில் 2001 செப்டம்பர் மாதத்திலிருந்து 2002 மார்ச் மாதம் வரை முதலமைச்சராக பதவியில் இருந்தார்.

அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை, ஜெயலலிதா இயக்குநராக இருந்த நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பதவிவகிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பதவிவிலகினார். இதற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அந்த வழக்கில் மேல் முறையீடு செய்து, அதில் விடுவிக்கப்பட்ட பிறகு, 2002 மார்ச்சில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா.