ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரைத்துறையினர் போராட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு வருத்தம் தெரிவித்து, செவ்வாயன்று தமிழக தலைநகர் சென்னையில் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். காலை 9 மணி அளவில் துவங்கிய தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

Image caption போராட்டத்தில் இருக்கும் திரைத் துறையினர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னந்திய நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட பல தமிழ் திரையுலக சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், மூத்த நடிகர் சத்யராஜ், முன்னணி நடிகர்கள் சூர்யா, கார்தீ, விக்ரம், உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்படவில்லை என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், உயர் நீதிமன்றங்களின் மூலம் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு மிக விரைவில் அவர் விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக அவர் பணியாற்ற வேண்டும் என்ற தமிழ் திரையுலகத்தின் பிராத்தனையை பிரதிபலிக்கும் போராட்டம்தான் இது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதவிற தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. படப்படிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.