“குப்பை அகற்றுபவர்களைப் பற்றிப் பேசாமல்; குப்பைகளைப் பற்றி பேசுவது மோசடியானது”

இந்திய ரயில் நிலையங்களில் இன்றும் கையால் மலம் அள்ளப்படுகிறது: அதியமான்
Image caption இந்திய ரயில் நிலையங்களில் இன்றும் கையால் மலம் அள்ளப்படுகிறது: அதியமான்

இந்தியாவை தூய்மையாக வைக்கவேண்டும் என்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று துவக்கி வைத்திருக்கும் “தூய்மையான இந்தியா” என்கிற நாடு தழுவிய பிரச்சார திட்டம் குப்பைகளைப்பற்றி மட்டும் பேசுகிறதே தவிர, காலம் காலமாக குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் துப்புறவுத்தொழிலாளர்கள் பற்றி பேச மறுக்கிறது என்கிறார் ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் நிறுவனர் இரா அதியமான்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் துப்புறவுப்பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அருந்ததியர்கள் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியில் அருந்ததியர் அமைப்புக்களில் ஒன்றான ஆதித்தமிழர் பேரவை, மோடியின் இன்றைய தூய்மையான இந்தியாவுக்கான பிரச்சார திட்டத்தை ஒரு மோசடியாக பார்ப்பதாக குற்றம் சாட்டினார் அதியமான்.

கையால் மலம் அள்ளுவது இன்றளவும் நீடிக்கிறது

அதிகாரப்பூர்வமாக கையால் மலம் அள்ளும் பணி இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக இந்திய, தமிழக அரசுகள் கூறினாலும் இன்றளவும் கையால் மலம் அள்ளும் பணியில் லட்சக்கணக்கான துப்புறவு தொழிலாளர்கள் தொடர்ந்தும் இதே அரசுகளால் ஈடுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் அதியமான்.

தமிழ்நாட்டில் துப்புறவுப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஐந்துலட்சம் பேருமே கையால் மலம் அள்ளும் பணியை செய்வதாகவே கருதவேண்டும் என்று வாதாடும் அதியமான், சென்னை உள்ளிட்ட நகரங்களில் கூட குடிசைப்பகுதிகளில் இன்றளவும் திறந்தவெளி கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புறவுப்பணியாளர்கள் மலத்தை தங்களின் கைகளாலேயே அகற்றவேண்டிய நிலை நீடிப்பதாக தெரிவித்தார்.

Image caption இந்தியாவின் தூய்மைக்கு எல்லோரும் கைகொடுங்கள் என்கிறார் மோடி

அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ரெயில்வே துறையில் சுமார் 42 லட்சம் ஊழியர்கள் பணிபுரிவதாக தெரிவித்த அதியமான், இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களில் நிற்கும் எல்லா ரயில்களிலுமே இன்றளவும் பயணிகள் கழிக்கும் மல ஜலக்கழிவுகளை துப்புறவுப்பணியாளர்கள் தங்களின் கைகளாலேயே அகற்றுவதாக விளக்கினார்.

"அரசு ஊதியமும் இல்லை; பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை"

தமிழ்நாட்டளவில் உள்ளூராட்சிகளின் சார்பில் பணிபுரியும் துப்புறவுத்தொழிலாளர்களாகட்டும், இந்திய ரெயில்வேத்துறைக்காக பணிபுரியும் துப்புறவுத்தொழிலாளர்களாகட்டும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்படுவதால் அவர்களுக்கு போதிய பணிப்பாதுகாப்போ, அரசுகளின் நியாயமான ஊதியமோ கிடைப்பதில்லை என்றார் அதியமான். மேலும் இவர்களின் பணிக்குத்தேவையான குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகள், காலுக்கான ஷூக்கள், முகத்துக்கான பாதுகாப்புகவசம் போன்றவை இவர்களுக்கு அரசுகளால் கொடுக்கப்படுவதில்லை என்றும் அதியமான் விமர்சித்தார்.

Image caption துப்புறவுத் தொழிலாளருக்கு அரசு ஊதியமும்; உரிய பாதுகாப்பும் அளியுங்கள் என்கிறார் அதியமான்

இந்த பின்னணியில் கங்கையை சுத்தப்படுத்துவது, தற்போது ஒட்டுமொத்த இநியாவையும் சுத்தப்படுத்துவது என்கிற மத்திய அரசின் பிரச்சாரங்கள் வெறும் விளம்பர நோக்கிலானவை என்று சாடும் அதியமான், தங்களின் மலஜலம் உள்ளிட்ட எல்லாவிதமான கழிவுகளையும் பொதுவெளியில் கொட்டி அசுத்தப்படுத்தும் பொதுமக்கள், அதை அப்புறப்படுத்தும் துப்புறவுத்தொழிலாளியை அருவெறுப்பாக பார்ப்பதும், தீண்டத்தகாதவனாக நடத்துவதும் மோசமான செயல் என்றும் அந்த மனநிலையில் மாற்றம் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.