கல்பாக்கம் அணு மின் நிலைய வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

  • 8 அக்டோபர் 2014
Image caption கல்பாக்கம் அணு மின் நிலையப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர் சுட்டதில் 3 பேர் பலி

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீர்ர்கள் முகாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலையில் பணிக்குச் செல்வதற்காக எழுந்த விஜய் பிரதாப் சிங் என்ற வீர்ர், தன்னுடைய துப்பாக்கியை எடுத்த பிறகு, பிற காவலர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று மோகன் சிங் என்பவரைச் சுட்டார். அதற்குப் பிறகு கணேசன், சுப்புராஜ், கோவர்தன் சிங், பிரதாப் சிங் ஆகிய வீர்ர்களும் சுடப்பட்டனர். இந்தச் சம்பவம் காலை 5.15 மணியளவில் நடந்தது.

இதில் மோகன் சிங், கணேசன், சுப்புராஜ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இதில் கணேசன், சுப்புராஜ் ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்த பிரதாப் சிங், கோவர்தன் சிங் ஆகிய இருவரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

40 வயதாகும் விஜய் பிரதாப் சிங், கல்பாக்கம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 9 எம்எம் கார்பைன் ரக துப்பாக்கி இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.