இந்திய சந்தையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்தும் விலை அதிகரித்தே வருகின்றன.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலக சந்தையில் உணவு விலை குறைந்தும் "இந்தியாவில் குறையவில்லை"

உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாக உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.

உணவு தானியம், எண்ணெய் பயிர்கள், பால், சர்க்கரை, இறைச்சி ஆகியவற்றின் சராசரி உலக விலைகளைக் கொண்டு மாதந்தோறும் உணவு விலை சுட்டெண்ணை ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கணக்கிடுவதுண்டு.

Image caption இந்திய சந்தையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்தும் விலை அதிகரித்தே வருகின்றன.

அந்தக் கணக்கின்படி 2014 செப்டம்பரில் உணவு விலைச் சுட்டெண், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பரில் இருந்த விலைகளோடு ஒப்பிடுகையில் உணவுப் பொருட்கள் 6 சதவீதம் விலை குறைந்திருப்பதாகத் தெரியவருகிறது.

தவிர உணவுப் பொருட்களின் விலைகள் ஆறு மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருவதையும் இது காட்டுகிறது. 1990களின் பிந்தைய காலப்பகுதியில் நடந்ததற்குப் பின்னர், இப்படி ஆறு மாதங்கள் தொடர்ந்து உணவுப் பொருட்கள் விலை குறைந்துவந்துள்ளதென்பது இதுவே முதல் முறை.

உலக அளவில் விவசாய உற்பத்தியும் மற்றும் பால் உற்பத்தியும் கூடியிருப்பது, ஏற்றுமதி சந்தையில் கிராக்கி குறைந்திருப்பது போன்றவை இதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

உலக சந்தையில் விலை தொடர்ந்து குறைந்துவந்தாலும், இந்தியாவில் மக்கள் வாங்கக்கூடிய இடங்களில் உணவுப் பொருட்களின் விலை குறைந்திருகவில்லை என இடதுசாரி பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.

உலக சந்தையில் விலை குறைந்தாலும் இந்தியாவில் நுகர்வோருக்கு விலை குறையாமல் இருப்பதற்கு அரசாங்கத்தின் கொள்கைகளே துணைபோவதும் ஒரு காரணம் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

செல்வந்தர்களிடம் இருந்து வரிவசூலித்து நிதி திரட்டாமல், ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய மானியங்களைக் குறைக்கின்ற ஒரு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடித்துவருவதாக அவர் சாடினார்.