ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பிரதிநிதி இல்லை என அறிவிக்க வேண்டும்: தி.மு.க.

படத்தின் காப்புரிமை AP
Image caption அரசு அலுவலகங்களிலிருந்து ஜெயலலிதா படங்களை அகற்ற தி.மு.க. கோரியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த, ஸ்ரீ ரங்கம் தொகுதி தற்போது பிரதிநிதியின்றி இருப்பதாக அறிவிக்கக் கோரி சட்டசபைச் செயலருக்கு தி.மு.கவின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல, ஜெயலலிதா தற்போது முதலமைச்சராக இல்லாத நிலையில், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், காவல் நிலையங்கள், அம்மா குடிநீர், உப்பு போன்ற அரசுத் தயாரிப்புகள் ஆகியவற்றிலிருந்து அவரது படத்தை நீக்கும்படியும் தி.மு.க கோரியுள்ளது.

இது தொடர்பாக தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் சட்டசபை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்ததால், ஓ பன்னீர்செல்வம் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு பத்து நாட்கள் கழிந்துவிட்ட நிலையிலும், அவர் தேர்வுசெய்யப்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்காதது, உள்நோக்கம் கொண்டது என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை எந்த நீதிமன்றத்தாலும் நிறுத்தப்படவில்லை என்பதையும் அன்பழகன் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவிர, ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் அவரது புகைப்படம் சட்டமன்ற வளாகத்திலும் செயலகத்திலும் பொருத்தப்பட்டிருப்பது, சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனைத்து மாநகராட்சி ஆணையர்களுக்கும் ஜே. அன்பழகன் அனுப்பியுள்ள கடிதத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அனைத்து அரசு அலுவலகங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், காவல் நிலையங்கள், உள்ளூராட்சி அமைப்புகள் ஆகியவற்றிலிருந்தும் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா தேயிலை போன்ற அரசு தயாரித்தளிக்கும் பொருட்களிலிருந்தும் அகற்றும்படி அவர் கோரியுள்ளார்.

இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அன்பழகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.