இந்தியாவின் புதிய மனநலக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் எல்லோருக்கும் மனநல மருத்துவம் கிடைப்பதை உறுதிசெய்வதுதான் மத்திய அரசின் இலக்கு என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மனநல தினம் முதன் முறையாக மத்திய அரசால் வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, தேசிய மனநல கொள்கையும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் தற்போது வசதியான பிரிவினருக்கு மட்டுமே மனநல மருத்துவம் கிடைக்கிறது என்றும் ஏழைகளை அணுகும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption புதிய கொள்கை ஏழைகளுக்கு உதவும் என்கிறார் இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

உளவியல் ரீதியான, மனநல ரீதியான மருத்துவத்தை அளிக்கும் பிரிவுகளை இந்தியாவின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தும் விதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்தியாவின் தேசிய மனநல கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இனம்காணப்பட்டுள்ளன.

சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் மனநல மருத்துவம் கிடைப்பதை உறுதிசெய்வது, போதுமான அளவில் இதற்கென நிதி ஒதுக்கீடு செய்வது, சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்குக் கூடுதல் கவனம் அளிப்பது, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் கவனம் அளிப்பது போன்ற பல அம்சங்கள் இந்த தேசிய கொள்கையில் பட்டிலிடப்பட்டிருக்கின்றன.

2011ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு இந்தக் கொள்கையை உருவாக்கி அரசுக்கு அளித்துள்ளது.

இப்படி தேசிய மனநல கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதை மனநல மருத்துவர்கள் வரவேற்கின்றனர்.

தேசிய மனநல கொள்கையில் கூறப்பட்டிருக்கம் விஷயங்களில், மனநலம் தொடர்பான விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரபல மன நல மருத்துவரான டாக்டர் ஷாலினி கூறினார்.

மனநல மருத்துவத்தைப் பொறுத்தவரை, ஆரம்ப நிலையில் கவனத்தில் எளிதில் குணப்படுத்த முடியும் இதை அரசு மட்டுமே செய்ய முடியும் என மனநல மருத்துவரான அன்புதுரை சுட்டிக்காட்டினார்.

வசதியற்றவர்களுக்கு மனநல மருத்துவம் அளிப்பது மிக முக்கியமான அம்சமாக இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் மனநல நோய்களுக்கு சிகிச்சை கிடைத்தாலும் உளவியல் ஆலோசனை என்பது கிடைப்பதில்லை அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் என ஷாலினி தெரிவித்தார்.

இது தவிர, விரைவில் புதிதாக இந்திய மனநலச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.

தற்போதுவரை இந்தியாவில் 1912ல் இயற்றப்பட்ட இந்திய லூனாசி ஆக்ட் என்ற சட்டமே, நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களுக்குப் பயன்படுத்தப்படுவருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 100ல் அறுபது பேருக்கு ஏதோ ஒரு விதத்தில் மனநலம் சார்ந்த ஆலோசனையோ, மருந்துகளோ தேவைப்படுகின்றன என மன நல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2020வாக்கில் இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகையிலான மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.