ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சம்மன் அனுப்புவது தொடர்பாக வரும் 29ஆம் தேதி உத்தரவு

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேர் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சம்மன் அனுப்புவது தொடர்பிலான தனது உத்தரவை அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிறப்பிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

Image caption தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது கலாநிதி மாறனுக்கு ஆதரவாக ஏர்செல் உரிமையாளரை மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னையின் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டி, சிவசங்கரனின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

அது தொடர்பில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்ததில் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 72 பக்க குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

ஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான இந்த வழக்கு திங்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நேரில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் இன்று கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கும் சம்மன் அனுப்புவது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 29 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சாய்னி தெரிவித்தார்.

இதனிடையே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுஎதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும்படி ஜெயலலிதா சார்பில் ஆஜரான உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் நாரிமன் கோரினார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் இந்த மனுவைவெள்ளியன்று விசாரிப்பதாக தெரிவித்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.