ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோளை ஏவியது இந்தியா

ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோளை ஏவியது இந்தியா
Image caption ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோளை ஏவியது இந்தியா

இந்தியாவின் ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி சி 26 ராக்கெட்டின் மூலம் இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 1 மணி 32 நிமிடங்களுக்கு ஏவப்பட்டது. 28வது முறையாக பிஎஸ்எல்வி ரக ராக்கெட் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் போக்குவரத்தைக் கண்காணிக்க உதவும் ஜிபிஎஸ் அமைப்பைப் போல, சொந்தமாக ஒரு அமைப்பை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கென இந்தியன் ரீஜினல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில்இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்கென மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் ஏவப்பட வேண்டும். ஏற்கனவே ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, ஐஆர்என்எஸ்எஸ் 1 பி ஆகியவை ஏவப்பட்டுவிட்ட நிலையில், இது மூன்றாவது செயற்கைக்கோளாக ஏவப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இன்னும் நான்கு செயற்கைக் கோள்கள் ஏவப்பட வேண்டும். ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இருபதாவது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள், சரியான புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 1,425.4 கிலோவாகும். இந்த செயற்கைக் கோளின் ஆயுள் பத்து ஆண்டுகள். 2015ஆம் ஆண்டுக்குள் ஏழு செயற்கைக்கோள்களையும் ஏவி, இந்த திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமி்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு 1420 கோடி ரூபாயாகும். நிலப் பகுதியிலும் கடல் பகுதியிலும் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை, வாகனங்களைக் கண்காணிப்பது, போக்குவரத்து வழிகாட்டி ஆகியவற்றில் இந்த நேவிகேஷன் அமைப்பு உதவும்.