ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன்

  • 17 அக்டோபர் 2014

சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 4 ஆண்டு சிறை தண்டனையும் பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption பிணை பெற்றார் ஜெயலலிதா

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீதான விசாரணை வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் வசிக்கும் அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மேல் முறையீடு தொடர்பிலான அனைத்து நகல்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அதிமுக அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஆதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.