சிறையில் இருந்து விடுதலையானார் ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

இந்திய உச்சநீதிமன்றம் வெள்ளியன்று ஜாமின் வழங்கியதை அடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சனிக்கிழமை ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரத்திற்குச் சென்று விடுதலையாகும் ஜெயலலிதாவை வரவேற்று கூட்டிச் சென்றனர்.

சிறைச்சாலையிலிருந்து வாகனத் தொடரணியாக ஹெச். ஏ. எல். விமானநிலையத்துக்கு சென்றுள்ள ஜெயலலிதா, அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னை வரவிருக்கிறார்.

சாலையோரமாக பெருந்திரளான அதிமுக தொண்டர்கள் கூடி நின்று ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்திருந்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஜாமீன் வழங்க நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அதற்கான ஆணையை வழங்கியிருந்தது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா இரண்டு பேர் வீதம் எட்டு பேர் தலா ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளித்ததையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டி குன்ஹா நான்கு பேரையும் ஜாமீனில் விடுவதற்கான உத்தரவை அளித்திருந்தார்..

ஜெயலலிதாவுக்கு ஜெயபால், குணவதி ஆகிய இருவர் தலா ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளித்திருந்தனர்.