நெருப்பாற்றில் நீந்துகிறேன்: ஜெயலலிதா அறிக்கை

தனது அரசியல் வாழ்க்கை நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்துவந்துள்ளது என சிறையில் இருந்து விடுதலையான பின்னர் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Image caption சிறையில் இருந்து பிணையில் விடுதலையாகி சென்னை திரும்பிய ஜெயலலிதாவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு தமிழக முதல்வர் பதவியை இழந்திருந்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து சனிக்கிழமை பிணையில் விடுதலையாகி சென்னை திரும்பியிருந்தார்.

ஞாயிறன்று கட்சித் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே தனது வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், அவற்றிலிருந்து தான் வெற்றிகரமாக மீண்டுவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தான் சிறையில் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பாலும், தற்கொலை செய்துகொண்டும் 193 பேர் உயிரிழந்திருப்பதாக ஜெயலலிதா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரின் சிகிச்சைக்காக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நலனுக்காகவும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தான் தொடர்ந்தும் உழைப்பேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.