நேரு- காந்தி குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைமை சாத்தியமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நேரு- காந்தி குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைமை சாத்தியமா?

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளை அடுத்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு நேரு-காந்தி குடும்பத்தினரை தவிர வெளியிலிருந்து யாராவது தலைவராகும் வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எப்போதாவது அது நடக்கலாம் என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜி.கேவாசன், நேரு காந்தி குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் தொண்டர்கள் தலைவராக விரும்பவில்லை என்பதுதான் தனது கருத்து என்று கூறியிருந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கட்சி என்றறியப்படும் காங்கிரஸ் கட்சி, இது போல ஒரே ஒரு குடும்பத்தையே சார்ந்திருக்கும் நிலை அதன் ஜனநாயகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்தக் கேள்வியை, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமியிடம் பிபிசி தமிழோசை கேட்டபோது, காங்கிரஸின் வெற்றிக்கும் அடிப்படையில் சோனியா காந்தியின் உழைப்பே காரணம், தொண்டர்களும் சோனியா காந்தியின் தலைமையையே விரும்புகிறார்கள் என்றார்.

தொண்டர்களின் ‘விருப்பம்’ என்று எப்படிக் கூறமுடியும், உட்கட்சித் தேர்தல்களே பல காலமாக நடக்கவில்லையே என்று கேட்டதற்கு பதிலளித்த நாராயணசாமி, 2015ல் காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அப்போது சோனியா காந்தியின் தலைமை வேண்டுமா என்பதை தொண்டர்களே முடிவு செய்யலாம். வேறு யார் போட்டியிட விரும்பினாலும் போட்டியிடலாம் என்றார்.

சிதம்பரத்தில் கருத்து அவ்வளவு ‘ஆணித்தரமாக’ வெளியிடப்பட்ட கருத்தல்ல, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த நாராயணசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.