மணல் 'கொள்ளை'- சகாயம் விசாரணைக்கெதிரான தமிழக அரசு மனு தள்ளுபடி

Image caption கனிமக் 'கொள்ளை': சகாயம் தலைமையாலன விசாரணைக்கெதிரான தமிழக அரசு மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடக்கிறதா என்பது குறித்து ஆய்வுசெய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டிருப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்குச் செலவாக பத்தாயிரம் ரூபாயைச் செலுத்தும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 11ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இதற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சகாயம் குழு நியமனத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தொழிற்துறை செயலாளர் சீராய்வு மனு ஒன்றைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியார் அடங்கிய அமர்வு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

தவிர, சகாயம் தற்போது இருக்கும் பதவியிலிருந்து அவரை விடுவித்து, நான்கு நாட்களுக்குள் விசாரணைக் குழுவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவருக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்துதரும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்குச் செலவாக, பத்தாயிரம் ரூபாயைச் செலுத்தும்படியும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்னணி

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த முறைகேட்டினால் அரசுக்கு சுமார் 16,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் அளித்த அறிக்கை ஆகியவை குறித்தும் தனது மனுவில் ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இந்த கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து விசாரிக்க, சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நடக்கும் கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து செப்டம்பர் 11ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியது.

இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் முறையிட்டது. கனிம, மணல் குவாரி முறைகேட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு விசாரித்துவருவதாகவும் தமிழக அரசு அப்போது வாதிட்டது. இருந்தபோதும், தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.