கருப்புப் பணம்: இந்திய மத்திய அரசு முழு பட்டியலையும் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 627 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் புதனன்று சமர்பித்தது.

படத்தின் காப்புரிமை AP

பிரஞ்சு அதிகாரிகள் இந்த விவரத்தை இந்திய அரசுக்கு கொடுத்திருந்தனர்.

இந்த பட்டியலை மூடி சீல் வைக்கப்பட்ட இரண்டு உறைகளில் வைத்து அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்விடம் சமர்பித்தார்.

இந்த உறைகளை சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் நீதிபதி எம்.பி.ஷாவிடமும், துணைத் தலைவர் நீதிபதி அரிஜித் பசாயத் இடமும் ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி சட்டரீதியான நடவடிக்கைகளை இந்த சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொள்ளும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப்பண விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இந்த வங்கி கணக்குகள் இந்திய வருமானவரி சட்டத்தின் விதிகளை பின்பற்றியுள்ளதா என்பது போன்ற விசாரணைகளை 2015 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த திங்களன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் கருப்புப் பண வழக்கின் விசாரணை நடைபெற்றபோது வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிய ஏழு இந்திய தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசின் சார்பில் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதையடுத்து நேற்று செவ்வாயன்று முழு பட்டியலையும் ஒப்படைக்க ஏன் மத்திய அரசு தயங்குகிறது என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

விசாரணை முடிந்த பெயர்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணை நிறைவடையாத நிலையில் மொத்த பெயர்களையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘பெயர்களை வெளியிட வேண்டும்’

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றும் அந்த கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை பொது மக்களிடம் வெளியிடுவோம் என்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதியளித்திருந்தது.

ஆட்சிக்கு வந்து ஐந்து மாதமான நிலையில் இன்றுவரை வரை கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் முழு பட்டியலையும் மோடி இன்னமும் ஏன் வெளியிடவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் விமர்சித்துள்ளன.

ஆட்சிக்கு வந்த 100நாட்களுக்குள் கருப்புப் பணம் வைத்திருக்கும் 55000 வங்கிக் கணக்குகளின் பட்டியலை வெளியிடுவதாக வாக்குறுதி அளித்த பாஜக இன்னும் ஏன் அதை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சி அமைத்து நூறு நாட்களில் கருப்புப் பணத்தை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த பாஜக, ஏன் 150 நாட்களாகியியும், தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்திய சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விமர்சித்துள்ளார்.

கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வர மத்திய அரசு தவறினால் மீண்டும் ஒரு போராட்டத்தை நாட்டு மக்கள் இதற்காக முன்னெடுக்க நேரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.