2ஜி வழக்கு : ஆ.ராசா, கனிமொழி மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது

இந்தியாவில் செல்லிட தொலைபேசிகளுக்கான இரண்டாம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டபோது நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆ ராசா

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மீதும் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தற்போது குற்றச்சாட்டுகளை வரைந்துள்ளது.

முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்ற சதித் திட்டத்திற்கான பிரிவின் கீழும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் குற்றத்தை மறுக்கின்றனர். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து நடைபெறும் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுவதற்கான வாதத்தை முன்வைப்பார்கள்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை அவரது உடல்நலத்தை கருத்தில்கொண்டு வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த திங்களன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் ரூபாய் 200 கோடி பணம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு அந்த 200 கோடி ரூபாய் பணத்தை அளித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.