கோஷ்டிப்பூசல் : ஞானதேசிகன் பதவி விலகல் விளக்கம்

மாநிலத் தலைவராக தான் இருக்கும் நிலையில் தன்னைக்கேட்காமல் பொதுச்செயலாளரை நியமிக்க முடிவு செய்த்து, பத்து லட்சம் உறுப்பினர் அட்டைகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அதில் காமராஜ், மூப்பனார் ஆகியோர் படங்கள் இடம்பெற வேண்டாமென கட்சித் தலைமை நினைப்பது ஆகிய காரணங்களால் தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

Image caption ஞானதேசிகன்

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் நேற்று கட்சித் தலைமைக்கு அனுப்பிய நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் தன்னுடைய ராஜினாமாவுக்கான காரணத்தை அவர் விளக்கினார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்காக தான் பணியாற்றியது பற்றி விவரித்த ஞான தேசிகன், ஆனால், அகில இந்தியத் தலைமை பல விவகாரங்களில் மாநிலத் தலைவரான தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்பது பற்றி தன்னிடம் விவாதிக்கவே இல்லை என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.

அதேபோல, பத்தாண்டுகளுக்குப் பிறகு மாநில காங்கிரசிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தன்னுடன் கலந்தாலோசிக்காமல் புதிதாக பொதுச் செயலாளரை நியமிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

வேலையே பார்க்காதவர்கள் புதிய பதவிகளைப் பெறும் நிலையில், தன்னுடன் பணியாற்றிவர்களுக்கு பதவிகளைப் பெற்றும்தரும் நிலையில் தான் இல்லாதபோது, இந்தப் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை என்றும் ஞானதேசிகன் கூறினார்.

தான் கூட்டும் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் வருவதில்லை என்றும், மாநிலத் தலைமைக்குத் தெரிவிக்காமல் அவர்கள் தனியாகக் கூட்டங்களைக் கூட்டுவதாகவும் ஞானதேசிகன் கூறினார்.

இதற்குச் சற்று நேரத்திற்குப் பிறகு வேறொரு இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அரசியல் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், ஞானதேசிகன் தொண்டர்களின் கருத்தை எதிரொலித்திருப்பதாகவும் அதைத் தான் வரவேற்பதாகவும் கூறினார்.

2011ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்ததை அடுத்து, அப்போதைய மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு பதவி விலகியதும், சில மாதங்களுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் பி.எஸ். ஞானதேசிகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.