டில்லியில் முஹரம் ஊர்வலம் குறித்து பதற்றம்

படத்தின் காப்புரிமை kumar ravi
Image caption ஹிந்து மஹா பஞ்சாயத்து நடப்பதைக்காட்டும் படம்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தில்லியின் வடபகுதியான திரிலோக்புரியில் இடம்பெற்ற மதவன்முறை ஏற்படுத்திய கசப்பு மறைவதற்குள் தற்போது, தில்லியின் பாவனா பகுதியில் ஒரு மதக்கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நாளை நடைபெறவுள்ள முஸ்லிம்களின் முஹரம் பண்டிகையின் ஊர்வலத்திற்கு தில்லியின் வடமேற்கு பகுதியான பாவனாவில் உள்ள ஜாட் சமூகத்தை சேர்ந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பகுதியின் அருகில் அமைந்திருக்கும் கிராமப்பகுதியிலிருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்ட ‘மஹா பஞ்சாயத்’ கூட்டத்தில், ஜாட் சமூகத்தினரின் கிராமத்திற்குள் முஸ்லிம்களின் முஹரம் பண்டிகையின் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் முஹரம் பண்டிகையையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.

'முஹரம் இந்திய கலாசாரம் அல்ல'

சுமார் 1000 பேர் கலந்துக்கொண்ட இந்த ஜாட் ஜாதியினரின் மஹா பஞ்சாயத் கூட்டத்தில் பேசிய அந்த கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ப்ரதீப் மதூர், முஹரம் மற்றும் தாஜியா ஆகியவை இந்தியக் கலாசாரம் அல்ல என்றும் இதை முஸ்லிம்கள் கொண்டாட விரும்பினால் அவர்களின் இல்லத்தில் கொண்டாடட்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த ஊர்வலத்தை எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், இது எமது குழந்தைகளின் மீது தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

வாள் போன்ற ஆயுதங்களை ஏந்திச்செல்லும் ஊர்வலத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், ஊர்வலம் நடைபெறும்போது அதை எப்படியெல்லாம் அனுமதிக்கக்கூடாது என்பதை செல்லிட தொலைபேசிகளின் எஸ்.எம்.எஸ் மூலம் தாங்கள் பரப்புவோம் என்றும் ஆர்ய சமாஜ் இயக்கத்தை நரேஷ்ஆர்யா தெரிவித்தார்.

இந்த மஹா பஞ்சாயத் கூட்டத்தில் அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குகன் சிங்கும் கலந்து கொண்டார்

இந்த மஹாபஞ்சாயத்தில் கலந்து கொள்ளுமாறு விநியோகிக்கப்பட்ட சுற்றறிக்கைகளில், இந்த ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் கடைகளில் திருடுகின்றனர் என்றும், இது போன்ற அநியாயங்களை தடுக்க ஹிந்துக்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முஸ்லீம்களின் விளக்கம்

ஜாட் சமூகத்தினர் வாழும் பகுதியில் இந்த ஊர்வலத்தை நடத்தமாட்டோம் என்று கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதியே காவல் துறையினரின் முன்னிலையில் ஜாட் மக்களிடம் தாங்கள் தெரிவித்து விட்டதாக கூறுகிறார் அந்த பகுதியில் வாழும் மொஹமத் ஷஹாபுத்தின். இவ்வாறு முன்னரே அறிவிக்கப்பட்ட ஒரு விவகாரம் தொடர்பில் தற்போது ஏன் மஹா பஞ்சாயத் கூட்டப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ள மொஹமத் ஷஹாபுத்தின், இது முஸ்லிம்களிடம் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அந்த பகுதியில் வாழும் வேறு ஒரு முஸ்லிம் நபர், எத்தனையோ ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஊர்வலத்தின்போது சில ஹிந்துக்கள் காணிக்கை வழங்கி வந்ததாகவும், அப்படியானதொரு ஊர்வலத்திற்கு திடீர் என்று எதிர்ப்பு எழுந்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் நடந்து முடிந்த பக்ரித் பண்டிகையன்று அப்பகுதி முஸ்லிம்கள் தங்களுக்கு சொந்தமான பசுக்களை உயிர்பலி கொடுத்ததாக, ஜாட் சமூகத்தினர் முஸ்லிம்களின் வீட்டிற்குள் புகுந்து மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பகுதியின் நிலவரம் குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இரு சமூகத்தினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.