ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தலும் கருத்துச் சுதந்திரமும்

இந்தியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேநேரம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று கிட்டத்தட்ட 5000 தகவல்களை (pieces of information) ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அணுகுவதிலிருந்து ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தடை விதித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திடம் பல அரசாங்கங்கள் இவ்வகையான கட்டுபாட்டு கோரிக்கைகளை முன்வைத்திருந்தாலும், அமெரிக்காவையடுத்து இந்தியாவிடமிருந்துதான் அதிக அளவிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.

இந்திய சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் கணினி தொடர்பான அவசரநிலை குழுவின் கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஃபேஸ்புக் துணைப் பொது வழக்கறிஞர் கிறிஸ் சோனடர்பி தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்லது அரசாங்கத்தை விமர்சனம் செய்த தகவல்களை கட்டுப்படுத்தத்தான் பெரும்பாலான கோரிக்கைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமீபத்திய காலங்களில் சில சமூக வலைத்தளங்களின் மூலமும் கைத்தொலைப்பேசிகளின் மூலமும் வன்முறைகளைத் தூண்டும் வெறுப்புணர்வுக் கருத்துக்கள் பல வெளியாகிவருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விசாகப்பட்டிணத்தை தாக்கிய ஹுத்ஹுத் புயல், கெட்ட மனிதர்களை அழித்ததில் தான் மகிழ்ச்சியடைவதாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளும் இதுபோன்ற சில கட்டுப்பாட்டு முயற்சிகள் நியாயமானவை என்றாலும், அது ஒருவரது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் அமையக்கூடாது என்று சமூக ஊடக நிபுணரும் செய்தியாளருமான மாதவன் நாராயணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.