மருத்துவமனையில் எலிகளைக் கொல்ல ரூ 55 லட்சம் செலவில் வேட்டை

Image caption மருத்துவமனையில் எலிவேட்டை - செலவு 55 லட்சம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள ஒரு அரசு மருத்தவமனையின் வளாகத்தில் பெருத்துவிட்ட ஆயிரக்கணக்கான எலிகளை கொல்லும் பணிகளில் அந்த மருத்துவமனை ஈடுபட்டுவருகிறது.

மஹாராஜா யஷ்வந்தராவு என்ற அந்த மருத்துவமனையில் இதுவரை 2500க்கும் அதிகமான எலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பூச்சி கட்டுப்பாடு நிறுவனத்தின் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த மருத்துவமனையில் உள்ள சுமார் 8,000 எலி-வளைகளில் கிட்டத்தட்ட 70,000 எலிகள் பதுங்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அந்த எலிகள் மருத்துவமனையில் உள்ள உபகரணங்களை சேதப்படுத்துவதும் நோயாளிகளை கடிப்பதுமான சம்பவங்கள் அதிகரித்து வந்ததை அடுத்து பூச்சி கட்டுப்பாடு நிறுவனத்தை மருத்துவமனை நிர்வாகம் அணுகியுள்ளது.

இந்தியாவின் பல அரசு மருத்துவமனைகள் தூய்மையாக பராமரிக்கப்படாததே இதற்கு காரணம் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அங்கிருக்கும் எலிகள் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது என்றும் அவை ஆயிரக்கணக்கில் இருப்பதால் தான் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியின் மூத்த காவல் துறை அதிகாரி சஞய் டுபே தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எலி-வளைகளின் அருகில் விஷம் கலந்திருக்கும் இறால்கள், வெல்லம், சுண்டல் மற்றும் ஆப்பிள்கள் போன்ற உணவை விட்டுவைப்பதாக, அந்த பணியை மேற்கொண்டு வரும் பூச்சிக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் கர்மகர் தெரிவித்தார்.

எலிகளை ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளின் மொத்த செலவு கிட்ட தட்ட ரூபாய் 55 லட்சமாகும்.

எலிகள் மிகவும் புத்திசாலி விலங்குகள் என்றும், அவைகளில் ஒரு எலி ஒரு உணவு சாப்பிட்ட பிறகு இறப்பதை கண்ட மற்ற எலிகள் அந்த உணவை சாப்பிடுவதில்லை என்றும் தெரிவித்தார் பூச்சிக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் கர்மகர். எனவே எலிகளை ஏமாற்ற ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விதமான உணவை வைப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை முடிந்த அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்த மருத்துவமனையில் எலிகளும் பிற பூச்சிகளும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் இதே பூச்சி கட்டுப்பாடு நிறுவனம் கிட்ட தட்ட 10,000 எலிகளை கொன்றதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்து கடவுளான விநாயகரின் வாகனமாக கருதப்படும் எலிகளை கொல்லும் இந்த நடவடிக்கைகளுக்கு சில இந்து மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.