அச்சகத்தை கொள்ளையிட்ட பெண்கள் சிசிடிவியில் சிக்கினர்

படத்தின் காப்புரிமை none
Image caption 14 நிமிடங்களில் 'வேலை' முடிந்தது

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கசியாபாத் பகுதியில் உள்ள அச்சகம் ஒன்றுக்குள் நுழைந்த 13 பெண்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ஒளியுணர் அலுமினிய தகடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை நடந்த இந்த திருட்டு சம்பவத்தை அந்த அச்சகத்தின் உரிமையாளர் வினீத் தியாகி கண்டுபிடித்துள்ளார்.

திருட்டு நடந்த மறுநாள் அச்சகத்திற்கு சென்ற அந்த உரிமையாளர் அந்த வளாகத்தின் பிரதான கேட் திறந்த நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

அந்த அச்சகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களில், அந்தப் பெண்கள் வளாகத்திற்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்தப் பெண்கள் 12 அடி உயரமான சுவர் மீது ஏறிக் குதித்து அந்த வளாகத்துக்குள் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது.

தங்களின் முகங்களை துப்பட்டா வைத்து மூடியிருந்த அந்த பெண்களின் வயது இருபதுகளில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பெரிய பூட்டுகளை உடைத்து அந்த அச்சகத்திற்கு உள்ளே அவர்கள் நுழைந்துள்ளனர்.

அந்த இடத்தில் பொருட்களை தேடிய அவர்கள், அலுமினியத் தகடுகளை கண்டவுடன் அவற்றை அவர்கள் கொண்டு வந்த பிலாஸ்டிக் பைகளில் அடுக்கி வைத்துள்ளனர்.

உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளின்படி, மொத்த திருட்டு வேலையும் வெறும் 14 நிமிடங்களில் முடிந்துள்ளது.

அதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராவை கண்ட அந்த பெண்கள் அதன் தொடர்புகளை துண்டித்துள்ளனர். எனினும் வளாகத்தின் வெளிப்பகுதியில் இருந்த கெமராக்களை அவர்கள் கவனிக்கவில்லை.

இந்த திருட்டு சம்பவத்தை உறுதி செய்துள்ள அப்பகுதி காவல்துறை அதிகாரி அவ்னேஷ் கௌதம், விசாரணைக்காக அந்த சிசிடிவி கெமராக்களின் பதிவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.