இந்தியப் படை மீது கருணா குற்றச்சாட்டு; புகார் வரவில்லை- இந்தியா

Image caption விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான, துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் ஜயரட்னவுடன்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர், 1980களின் இறுதியில் அமைதிக்கும் பணியில் இந்தியாவுக்குச் சென்ற இந்தியப் படையினர், தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இலங்கை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்திய அரசாங்கத்திற்கு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இலங்கைப் போரின்போது அமைதிப் பணியில் ஈடுபடுவதற்காக வந்த இந்திய அமைதிப் படையினர், ஈழத் தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை இலங்கையில் இருந்த இந்திய அமைதிப் படையினர், அந்தக் காலகட்டங்களில், ஏராளமான ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதற்கு ஆதாரம் உள்ளதாகவும் அமைச்சர் கருணா தெரிவித்திருந்தார்

இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, இலங்கை அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை என்னவென்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருத்தின், இலங்கை அரசாங்கம் இது போன்ற பிரச்சனைகளை எழுப்பவில்லை என்று தெரிவித்தார்.

'எங்களைப் பொறுத்தவரை இவை சம்மந்தமில்லாதவர்களின் குரல்கள். இது போன்ற சம்மந்தமில்லாதவர்களின் குரல்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சனையை எழுப்பினால் மட்டுமே இந்திய அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைப் பிரதமரின் வருகையைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

இதனிடையே, இலங்கை பிரதமரின் வருகையைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மதிமுக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image caption மதிமுக ஆர்பாட்டம்

இலங்கை பிரதமர் தி.மு. ஜயரட்ன திருப்பதி வழிபாட்டுக்காக வந்ததைக் கண்டித்து இன்று வெள்ளியன்று மதிமுக கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்புக்கொடியுடன் திருத்தணியிலிருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட போராட்டக்காரர்களை திருத்தணி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 93 பேர் கைது செய்யப்பட்டதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரி மணியழகன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக சட்டப் பேரவையினைக் கூட்டி, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்