சாதி ரீதியான ஜனத்தொகை கணக்கெடுப்பு தேவையா?

இந்திய அரசாங்கம் மக்கட்தொகை கணக்கெடுப்பை செய்யும்போது சாதிரீதியான விவரங்களையும் திரட்ட வேண்டும் என இரண்டு சந்தர்ப்பங்களில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புகளை இந்திய உச்சநீதிமன்றம் நேற்று வெள்ளியன்று ரத்து செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா தேவையில்லையா என்பது அரசாங்கம் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாதென்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் 2008ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் வழங்கியிருந்த தீர்ப்புகளை எதிர்த்து இந்தியாவின் மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆணையர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சாதிவாரி மக்கட்தொகை கணக்கெடுப்பு அவசியமற்றது என்று வாதிட்டுவரும் எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் இத்தீர்ப்பு பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

சாதிரீதியான மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டால், அது மக்களைப் பிளவுபடுத்துவதற்கும், அவர்களிடையே பகையை ஊட்டி மோதல்களை உருவாக்குவதற்கும்தான் பயன்படும் என ரவிக்குமார் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்களில் சில குறிப்பிட்ட சமூகத்தினரின் கூடுதல் எண்ணிக்கையை பயன்படுத்திக்கொண்டு சிலர் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளத்தான் இது வழிவகுக்கும் என்றும் ரவிக்குமார் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என பிபிசி தமிழோசையிடம் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளரான ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் அ மார்க்ஸ் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சமூக நீதி கிடைக்க வேண்டுமானால், சாதி ரீதியான மக்கட்தொகை கணக்கெடுப்பும், அதன் அடிப்படையிலான இட ஒதுக்கீடும் அவசியம் தேவை என்று அவர் வாதிட்டார்.