சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயா தரப்பு ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

  • 8 டிசம்பர் 2014
Image caption சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு: ஜெயலலிதா தரப்பு ஆவணங்கள் கொண்டுவரப்படுகின்றன

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீடு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும், நகல்களும் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் இன்று திங்களன்று, உயர் நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளன. அவை மொத்தமாக 686 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஜெயலலிதா தொடர்புடைய 174 பகுதிகளும், சசிகலா மற்றும் சுதாகரன் தொடர்புடைய தலா 171 பகுதிகளும், இளவரசி தொடர்புடைய 170 பகுதிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும் 4 ஆண்டு சிறை தண்டனையும் பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த அக்டோபர் 17 ஆம் தேதியன்று இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட இந்திய உச்சநீதிமன்றம், மேல் முறையீடு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் தற்போது அவை பெங்களூரு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட ஆவணங்களை சரிபார்க்க நேரம் தேவை என்பதால், அவை சமர்ப்பிக்கப்படும் போது வழங்கப்படும் பதிவு எண்கள் உடனடியாக வழங்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் இன்னும் இரண்டு நாட்களில் அவை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வராக அப்போது பொறுப்பு வகித்த ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதே சமயம் இவரோடு சேர்த்து சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரும் தண்டிக்கப்பட்டிருந்தார்கள்.

தொடர்ந்து இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுபவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை இழப்பார்கள் என்கிற முறையில் ஜெயலலிதாவும் தனது முதல்வர் பதவியை இழந்துள்ளார்.