உபர் வாகன சேவைக்கு தடையும், சமூக ஊடகக் கிண்டல்களும்

இந்தியத் தலைநகர் டில்லியில், இணையதளத்தின் மூலம் பதிவு செய்து வரவழைக்கப்பட்ட ஒரு வாடகை டாக்ஸியில் பயணித்த ஒரு பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அந்த வாடகை வாகன நிறுவனத்துக்கு டில்லி அரசு தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption டில்லியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆனால் இப்படியானத் தடைகள் மூலம் இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்செயல்களை தடுத்து நிறுத்த முடியுமா என பொங்கி எழுந்தனர் சமூக வலைத்தள ஆர்வலர்கள். உடனே இலவச ஆலோசனைகள் வந்து குவிந்தன. நக்கல் நையாண்டிக்கும் குறைவில்லை.

நாட்டில் பாலியல் வன்செயல்களை நிறுத்த இந்தக் சமூக ஊடகப் புலிகள் இப்பிரச்சினைக்கான தீர்வு என்னவோ உடனடி காஃபியை தயாரிப்பது என்பது போல கருத்துக்களை கூறி வருகின்றனர். எப்படியிருந்தாலும் ஆலோசனை சொல்வதற்கு என்ன பணமா செலவாகப் போகிறது.

வாகனத் தடைதான் தீர்வா?

தி அக்ரான் ப்ளாக் எனும் வலைதளம், டில்லி அரசு வாடகை வாகனங்களை தடை செய்தால் போதுமா?....வயதுக்கு வந்த ஆண் பெண் இடையேயான உறவுகளைக் கூடத் தடை செய்ய வேண்டும் என்று நக்கலடித்து, ஆண் நண்பர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நையாண்டி செய்துள்ளது. அந்த பிளாகை எழுதியுள்ள நிதின் பாய் இதோடு நிற்கவில்லை. கணவருக்கும் தடை விதிக்க வேண்டும், ஏனென்றால் அதன்மூலம் திருமணத்துக்கு பிறகுநடை பெறும் பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க முடியுமே என்று குசும்பாக எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கைது செய்யப்பட்டுள்ள வாகன ஓட்டுநர்

அதேவேளை இணையதள செயலி மூலம் பதிவு செய்யப்படும் வாடகை வாகனப் பயணத்தையும், பாலியல் வல்லுறவையும் ஏன் தொடர்புபடுத்த வேண்டும் என்று வேறு கருத்து மோதல்கள்.

உபர் வாடகைக் கார் பயணத்துக்கு முன்னர் இந்தியாவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லையா...இப்படி கோபம் கொப்பளிக்கிறது ஸ்ருதிசேத்தின் டிவீட்டில்.

நிதின் பாயோ பஸ், மெட்ரோ ரயில் போன்றவற்றை ஓட்டுபவர்களை தமது பணி நேரம் முடியும் வரை வாகன ஓட்டி அறையில் வைத்து பூட்டுவதே ரொம்ப நல்லது என்கிறார்.

சும்மா இலவச கருத்துக்கள் தானே...அதனால் டில்லி பஸ் ஒன்றில் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடந்த பிறகு அரசு டில்லியில் பஸ்களை தடை செய்திருக்க வேண்டுமே. அது ஏன் செய்யப்படவில்லை எனும் கேள்விகள் வேறு அலசி காயப்போடப்படுகிறது சமூகத் தளங்களில்.

ஆனால் நக்கல் நையாண்டிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு பாரதூர பிரச்சினையும் இதில் உள்ளது. அதாவது வாடகை வாகனம் எடுக்கும்போது வசதி மற்றும் பாதுகாப்புக்கு இடையேயான மோதல். வேலைக்கு போகும் போதோ அல்லது இரவு நேர கேளிக்கைக்காக வெளியே செல்லும்போதோ குட்டைப் பாவாடை அணிந்து செல்லும் பெண்கள் பொதுப் போக்குவரத்தை விட, உபர் போன்ற வாகனங்களை விரும்புகிறார்கள் என்பது உண்மை.

கருத்துக்களுக்கு பஞ்சமில்லை

பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறோம் எனும் நோக்கில் கருத்துக் கண்மணிகள் அதைத் தடை செய், இதைத் தடை செய் என்று ஆலோசனை கூறும் லொள்ளு தாங்க முடியவில்லை. கௌரவ் கபூர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடை செய்துவிட்டால் பிரச்சினைகளே இல்லையே என்று நக்கலடித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption நக்கல், நையாண்டி மற்றும் வேதனையுடன் சமூக ஊடகங்களில் கருத்துக்கள்

இந்திய சமூக வலைத்தள் கருத்துப் பரிமாற்றங்களில் மின்சாரம் முதல் மொபைல் தொலைபேசியை தடை செய்ய வேண்டும் என்று பிரச்சாரம்.

துலிக்கா தூபே தனது டிவிட்டரில் கூறியுள்ளதில் வேதனையுடன் கூடிய விரக்தியும் தெரிகிறது. பஸ்கள், வாடகை வாகனங்கள், துணிகள், மதுபான விடுதிகள், பொது வாழ்க்கை ஆகிய அனைத்தும் தடை செய்துவிடுங்கள், குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரியட்டும் என்றும் நையாண்டிக்கு அப்பாற்பட்டு கடுமையாக சாடியுள்ளார்.

அரசின் மீதும் அதிருப்தி

ஆனால் இணைக் கருத்துக்களைக் கூறியுள்ள பெரும்பாலான பெண்கள், அரசு முக்கியப் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல், உடனடி நிவாரணி போலச் செயல்படுகிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அரசின் நடவடிக்கை போதாது என்று சாடல்

ஒரு ஆழமான சமூகப் பிரச்சினையை இந்தியர்கள் தமக்கே உரிய நகைச்சுவையுடன் கையாண்டுள்ளது இது முதல்முறை அல்ல, கடைசி முறையாக இருக்காது என்று கூடச் சொல்லலாம்.