ஆயிரம் வாரங்கள் தொடர்ந்து ஒடி 'டிடிஎல்ஜெ' திரைப்படம் சாதனை

  • 12 டிசம்பர் 2014

ஷாருக்கான் மற்றும் கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லெ ஜாயங்கே அதாவது தைரியமானவன் மணப்பெண்ணைக் கூட்டிச் செல்வான் என்ற பெயர்கொண்ட ஹிந்தி திரைப்படம் 1000 வாரங்கள் தொடர்ந்து மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை YASHRAJ FILMS
Image caption கஜோல் மற்றும் ஷாருக் கான்

இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் 100 நாட்களுக்கும் மேல் ஒடி பெருவெற்றி பெற்ற இந்தப் படம், பல திரையரங்குகளில் 6 மாதகாலம் தொடர்ந்து ஒடியுள்ளது. அதன் பிறகு பலமுறை தொலைக்காட்சிகளிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதேநேரம் திருட்டு விசிடிக்கள் காரணமாக இப்படத் தயாரிப்பாளர்கள் பல மில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர்.

தற்போது, மும்பை திரையரங்கில் காலைக் காட்சியாக மட்டுமே இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படம், வெள்ளித் திரையில் சித்தரிக்கப்படும் காதலை மாற்றியமைத்ததாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தப் படத்தின் கதாநாயகனான ஷாருக்கான், ஐரோப்பாவுக்கு விடுமுறைக்கு வரும் இந்தியப் பெண்மீது காதல் கொள்கிறார். பிறகு கதாநாயகி கஜோலுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தனக்கு அவரை திருமணம் செய்து வைக்குமாறு அவரின் பெற்றோரிடம் கோரி வெற்றி பெறுவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஷாருக்கானின் ரசிகர்கள் சிலர் அவரின் வீட்டு முன்பாக தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர்.