ஜிஹாதி ஆதரவு ட்விட்டர் கணக்கு: மெஹ்தி பெங்களூருவில் கைது

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் சமூக ஊடக தள கணக்கொன்றை நடத்தியதான சந்தேகத்தில், இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை IMRAN QURAISHI
Image caption கைதான இளைஞர் மெஹ்தி பிஸ்வாஸ்

கைதுசெய்யப்பட்டுள்ளது மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது இளைஞர் என பொலிசார் கூறுகின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் மெஹ்தி பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர் என்றும், இரவு பின்னேரத்தில் தனது டுவிட்டர் கணக்கில் இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பு பற்றி உத்வேகத்துடன் பதிவுகளை இட்டுவந்துள்ளார் அவர் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

அதேநேரம் இஸ்லாமிய அரசு அமைப்பின் உறுப்பினர்களுடன் மெஹ்தி நிஜமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என தாங்கள் கருதவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

@shamiwitness என்ற ட்விட்டர் கணக்கை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் நடத்துகிறார் என்று பிரிட்டனில் இருந்து வரும் தொலைக்காட்சியான சானல் 4 அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

ஏஎனது குடும்பம் மட்டும் தன்னை நம்பியிருக்கவில்லை என்றால் நானும் இஸ்லாமிய அரசு அமைப்பில் சேர்ந்திருப்பேன்" என மெஹ்தி இந்தக் கணக்கில் கூறியிருந்ததாக சானல் 4 குறிப்பிட்டிருந்தது.

சானல் 4 தகவலை அடுத்து இந்திய போலிசார் விசாரணைகளை தொடங்கியிருந்தனர்.

இஸ்லாமிய அரசு அமைப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததுடன், சிரியாவிலும் இராக்கிலும் அந்த அமைப்பு பெற்று வந்த வெற்றிகளை இந்த டுவிட்டர் கணக்கில் வெளியான பதிவுகள் சிலாகித்து வந்தன.

இந்த ட்விட்டர் கணக்குக்கு 18,000 பேர் பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

இந்த இஸ்லாமிய அரசு குறித்த தகவல்களை அறிய இந்த ட்விட்டர் கணக்கு ஒரு முக்கிய வழியாக இருந்தது.

மெஹ்தி பயன்படுத்திய அந்த டுவிட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்