'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

படத்தின் காப்புரிமை PTI
Image caption புதிய பாஜக அரசாங்கத்தின் கீழ் இந்து தேசியவாத அமைப்புகள் வலுவடைந்து வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்

வட- இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்து தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள மதமாற்ற நிகழ்வை அனுமதிக்கப் போவதில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகார் நகர மூத்த காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால் கூறினார்.

கட்டாயப்படுத்தலும் மோசடியும் தூண்டுதலும் இன்றி மதம் மாறுவது இந்தியாவில் சட்டபூர்வமானது.

கடந்த வாரம், ஆக்ரா நகரில் 50 முஸ்லிம் குடும்பங்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதாகக் கூறி, ஏமாற்றி மதம் மாற்றியுள்ளதாக கடும்போக்கு இந்து அமைப்புகள் மீது குற்றம்சாட்டப்படுகின்றது.

எனினும், அவர்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாக மதமாற்ற நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.