வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு 'பாரத ரத்னா'விருது.

இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான 'பாரத ரத்னா' விருது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் காலஞ்சென்ற கல்வியாளர் மதன்மோகன் மாளவியாவுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அடல் பிஹாரி வாஜ்பாய்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

அடல் பிஹாரி வாஜ்பாய்

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதை தமது டிவிட்டர் செய்தி மூலம் இதை உறுதியும் செய்துள்ளார்.

வாஜ்பாய்க்கு இந்த உயரிய விருது வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி கோரிவந்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட, அவரின் நீண்டநாள் சகாவான எல் கே அத்வானி கூட இந்தக் கோரிக்கை மீண்டும் விடுத்திருந்தார்.

இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவிவகித்த வாஜ்பாய், நாளை-வியாழக்கிழமையன்று தனது 90ஆவது வயதை எட்டும் நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல மூத்த பாரதீய ஐனதா கட்சித் தலைவர்கள் வாஜ்பாயை அவர் வீட்டில் சந்தித்து வாழ்த்தி வருகிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவு காரணமாக வீட்டை விட்டு வெளியே வராத வாஜ்பாய், வெளியாட்களை சந்திப்பதையும் குறைந்து வந்தார்.

மாளவியா

பட மூலாதாரம், bhu.in

படக்குறிப்பு,

காந்தியுடன் மாளவியா

சுதந்திர போராட்ட வீரரான பண்டித மதன் மோகன் மாளவியா, காசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தை நிறுவியவர். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்த மதன் மோகன் மாளவியா, இந்து மகா சபையை நிறுவியவர்களுள் ஒருவர். மரணத்துக்கு பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்படும் 11 ஆவது நபர் மதன் மோகன் மாளவியா.

மாளவியாவுக்கும், வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவர்கள் நாட்டுக்கு செய்த தொண்டுக்கான உரிய மரியாதை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்று மோடிதான் பரிந்துரை செய்துள்ளார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 43 பேருக்கு இதுவரை பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டுள்ளது.