என்கவுன்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிப்பு

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை குற்றவாளி என்று நிரூபணம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று செவ்வாயன்று விடுவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மோடியுடன் அமித் ஷா

குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு சிறப்பு காவல் பிரிவால், கடந்த 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட என்கவுன்டர் கொலை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதன்படி சோராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் கொலை போலியானது என்றும், இதற்கும் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், கடந்த 2006 ஆம் ஆண்டின் போது குஜராத் காவல் துறையினரால் மற்றொரு போலியான என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படிருந்தது.

இந்நிலையில் இந்த கொலைகளுக்கும் அமித் ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ள மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அவரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதி

சோராபுதீன் ஷேக், லஷ்கர் இ தொய்பா என்கிற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதால் தான் கொல்லப்பட்டதாக குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு சிறப்பு காவல் பிரிவு தெரிவித்திருந்தது. மேலும் அவர் அப்போது குஜராத் மாநில முதல்வராக பொறுப்பு வகித்த மோடிக்கு எதிராக கொலைச்சதித்திட்டம் தீட்டி வந்தவர் என்றும் குற்றம் கூறப்பட்டது. இந்த காரணத்திற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று, ஹைதராபாத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட சோராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கௌசர் பி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனைத்தொடர்ந்து தான் என்கவுன்ட்டர் கொலையும் நடைபெற்றது.

மத்திய புலனாய்வுத் துறையால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு காவல்துறை உயரதிகாரிகளையும் இணைத்து மொத்தமாக 36 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் அப்போது சிபிஐ தரப்பில் கூறும் போது, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக இருந்த சோராபுதீன் ஷேக்கின் மனைவி கௌசர் பி மற்றும் துல்சிராம் பிரஜாபதி ஆகியோரை கொலை செய்யும் விவகாரத்தில் அமித் ஷா சம்பந்தப்பட்டிருந்தார் என்று குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.