உக்கிரச் சண்டையினாலும் உயிரிழப்புகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் புலிகள் இறப்பு அதிகரிப்பது ஏன் ?

  • 2 ஜனவரி 2015

இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 64 புலிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image caption உக்கிரச் சண்டையினாலும் உயிரிழப்புகள்

இதில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக, 15 புலிகள் உயிரிழந்துள்ளன என்று தேசிய புலிகள் காப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

முதுமை, எல்லையை வகுத்துக் கொள்வதில் புலிகளிடையே ஏற்படும் மோதல்கள், இதர காரணங்களுக்கான மோதல்கள் மற்றும் நோய் காரணமாகவே பெரும்பாலும் இவை மாண்டுபோயுள்ளன என்று கூறப்படுகிறது.

சட்டவிரோதமான வகையில் புலிகள் வேட்டையாடப்படுவது குறைந்து போயிருந்தாலும் அவையும் இதற்கு மேலும் ஒரு காரணமாக தொடர்கின்றன.

ஒரு புலியின் சராசரி ஆயுட்காலம் 12-15 வருடங்கள் எனும்போது, 64 புலிகளின் இழப்பு என்பது சுமார் 600 வருட பலன்களின் இழப்புக்கு சமம் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் புலிகள் காப்பு ஆணையத்தின் ஒரு உறுப்பினரான முருகானந்தம்.

மேம்பட்ட தொழில்நுட்பம் தேவை

தேசிய புலிகள் காப்பு ஆணையம் புலிகளின் உயிரிழப்புகளை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டையும் அவர் மறுக்கிறார்.

இதுவரை புலிகள் உயிரிழந்துள்ளதை அறிந்த பின்னரே அவற்றை சென்று பார்க்கும் நடைமுறைக்கு பதிலாக, மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் புலிகள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போதோ அல்லது காயமடைந்திருக்கும்போதோ முன்கூட்டியே அங்கு செல்ல முடிந்தால் அவற்றின் உயிரிழப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும் எனவும் முருகானந்தம் கூறுகிறார்.

அவ்வகையில் தொழில்நுட்ப நடவடிக்கையை மேம்படுத்த புலிகள் ஆணையம் சில பணிகளை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

12 வருடங்களுக்கு புலிகளை வளர்க்க ஆண்டொன்றுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்களைச் அந்த அமைப்பு செலவு செய்கிறது என்றும் அவர் கூறினார்.