சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் - காவல்துறை

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதாக டில்லி காவல்துறை ஆணையாளர் பீம் சயின் பாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மனைவியுடன் சசி தரூர்

புதுடில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பீம் சயின் பாஸ்ஸி, இந்த வழக்கில் இதுவரை பெறப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை ஆதாரங்களை கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார். அதனால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்த வழக்கில் குற்றவாளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், அது தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுனந்தா புஷ்கர், டில்லியில் உள்ள நட்சத்திர விடுதியின் அறையில் இறந்து காணப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் சுனந்தா இறந்திருக்கலாம் என்று டில்லி காவல் துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர். இவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சசி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான தகவல்கள் மூலம் சசி தரூர் திருமணத்திற்கு வெளியிலான தொடர்பு வைத்துள்ளார் என்ற சர்ச்சை எழுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சந்தேகம் ஏற்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, இந்த வழக்கின் விசாரணைகள் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 ஆம் பிரிவின்கீழ் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி

படத்தின் காப்புரிமை AFP
Image caption சசி தரூர்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பில் அடையாளம் தெரியாதோர் மீது டில்லி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது குறித்த செய்தி, தம்மை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளதாக, சசி தரூர் தெரிவித்துள்ளார். தன்னுடைய மனைவியின் மரணத்தில் எவ்வித சதிச் செயலும் இல்லை என்றே தாம் இதுநாள் வரை கருதிவந்துள்ளதாகக் கூறியுள்ள தரூர், விசாரணை தொடர்பாக தான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்று உறுதியளித்துள்ளார். காவல்துறை எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதையும் தமக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுனந்தா புஷ்கர் மரணத்தில் நீடித்து வந்த மர்மத்தில் முதல்கட்டமாக அது கொலை தான் என்று ஆதாரங்கள் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும், சுனந்தா புஷ்கரின் கணவருமான சசி தரூரிடம் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் டில்லி காவல்துறை ஆணையாளர் பீம் சயின் பாஸ்ஸி இன்று தெரிவித்துள்ளார். அதைப்போல் சுனந்தா புஷ்கர் மரணமுற்று கிடந்த அந்த நட்சத்திர விடுதியில் பணிபுரிபவர்களிடமும், சதி தரூரின் உறவினர்களிடமும் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணைகள் மேற்கொள்ளவர்கள் என்றும் பாஸ்ஸி குறிப்பிட்டார்.