இந்தியாவின் 19 மாநிலங்களில் 'அபாயகரமான' குடிநீர்

இந்தியாவின் 19 மாநிலங்களில் குடிநீரில் அபாயகரமான அளவுக்கு புளோரைட் உள்ளதாகக் கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் அது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption குடிநீரில் அபாயகரமான அளவுக்கு புளோரைட்

அனுமதிக்கப்பட்ட அளவைவிட 14,132 குடியிருப்பு பகுதிகளில் குடிநீரில் புளோரைடின் அளவு அதிகமாகவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்ததை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பில் மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

இவ்வகையான குடிநீர் காரணமாக பெருமளவிலான மக்கள் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் நேரிடலாம் என்று மத்திய அரசின் சுகாதாரம் மற்று குடும்ப நலத்துறை கவலையடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன.

நாட்டு மக்களுக்கு சுகாதாரத்துடன் வாழும் உரிமை உள்ளது என்று கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணயம், மத்திய அரசின் குடிநீர் மற்றும் வடிகால்துறை அமைச்சகம் இது குறித்த பதிலை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

கடுமையான பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக புளோரைட் கலந்துள்ள குடிநீரை குடிப்பதால் காலப்போக்கில் பற்கள், எலும்புகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வயிற்று வலி, தலைசுற்று, வாந்தி, தசைபிடிப்பு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படலாம் சுகாதார அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் கோரியுள்ளதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதியன்று, இந்தப் பிரச்சினையின் தாக்கம் மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து மத்திய குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகம் விளக்க வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

குடிநீரில் புளோரைடின் அளவு கூடுதலாக இருப்பதால ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகத் தகவல்களை மேற்கோள்காட்டி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதற்கான விளக்கத்தை கோரியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவு

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், கர்நாடகம், மராட்டியம், ஒதிஷா, மேற்கு வங்கம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒரு லிட்டர் குடிநீரில் 1.5 மில்லிகிராம் வரையில் புளோரைட் இருக்கலாம். ஆனால் அதுவே 10 மில்லிகிராம் அளவுக்கு இருக்குமாயின் எலும்புகளை கடுமையாக முடக்கிவிடும் நோய்க்கு காரணமாகிவிடும்.