பெருமாள் முருகனின் ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு

  • 19 ஜனவரி 2015
பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன்
Image caption பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன்

தமிழ்நாட்டில் தற்போது சர்ச்சையை தோற்றுவித்திருக்கும் மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகனுக்கும், அவரது நாவலை எதிர்த்தவர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசின் அதிகாரிகள் அவரிடம் ஒப்பந்தம் ஒன்றை எழுதி வாங்கியிருந்தனர்.

மாதொருபாகன் நாவலை எழுதியமைக்காக பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்புகோருவதாகவும், அந்த நாவலில் திருச்செங்கோடு குறித்து இருக்கும் எல்லாவிதமான விவரணைகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அனைத்தும் அந்த புத்தகத்தின் அடுத்த பதிப்பில் நீக்கப்பட்டுவிடும் என்றும், தற்போதைய பதிப்பின் விற்கப்படாத புத்தகங்கள் அனைத்தும் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மக்களின் மனதை புண்படுத்தும்விதமான எந்தக் கருத்துக்களையும் தான் பேட்டியாகவோ கட்டுரையாகவோ வெளியிடமாட்டேன் என்றும் பெருமாள் முருகன் ஒப்புக்கொண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.

அவரை நிர்ப்பந்தப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.

அந்த வழக்கு குறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ச தமிழ்ச்செல்வன் பிபிசி தமிழோசையிடம் பெருமாள் முருகனிடம் நிர்ப்பந்தப்படுத்தி இப்படி ஒரு ஒப்பந்தத்தை பெற்ற தமிழக அரசின் அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்காமல் அனுமதிப்பது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவே வழிசெய்யும் என்று தெரிவித்த தமிழ்ச்செல்வன் அதனாலேயே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தமது அமைப்பு பொதுநல வழக்கை தொடுத்திருப்பதாக கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை