காங்கிரஸில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்; ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை PIB
Image caption தலைமுறை தலைமுறையாக கட்சிக்கு உழைத்த தன்னை, காங்கிரஸ் மிக மோசமாக நடத்தியதாகக் கூறுகிறார் ஜெயந்தி நடராஜன்.

முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயந்தி நடராஜன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முன்னதாக, ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்று வெள்ளிக்கிழமையன்று காலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானது.

இந்தக் கடிதத்தில், தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பல விஷயங்களை ராகுல்காந்தி தனது கவனத்திற்குக் கொண்டுவந்து, அதனை மனதில் வைத்து சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்க வேண்டுமென்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாகவே வேதாந்தா, அதானி போன்ற நிறுவனங்களின் மிகப் பெரிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லையென்றும் கூறியிருந்தார்.

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், திடீரென ஒரு நாள் தன்னை அழைத்த பிரதமர் மன்மோகன் சிங், கட்சிப் பணிகளுக்குத் தேவைப்படுவதால், காங்கிரஸ் தலைவரின் உத்தரவுப்படி ராஜினாமா செய்யவேண்டுமெனக் கோரியதாகவும் அந்தக் கடிதத்தில் ஜெயந்தி நடராஜன் கூறியிருந்தார்.

ஆனால், அதற்கு மறுநாள், ஒரு தொழிற்கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதில் இருந்த முட்டுக்கட்டைகள் இனி இருக்காது என்று தெரிவித்ததாகவும் இது தனக்கு மிகுந்த வருத்ததை அளித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சுற்றுச்சூழல் குறித்த ராகுல்காந்தியின் கவலைகளுக்கு ஏற்ப தான் நடந்துகொண்டதாகக் கூறுகிறார் ஜெயந்தி நடராஜன்.

ராகுல்காந்தியையும் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் பார்க்க பல முறை முயற்சித்ததாகவும் ஆனால், அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லையென்றும் கடித்ததில் ஜெயந்தி நடராஜன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயந்தி நடராஜன், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கட்சிப் பதவியேதும் தரப்படவில்லை என்பதோடு, ஊடகங்களிலும் தன்னைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 2013 நவம்பர் 17ஆம் தேதி தன்னை அழைத்த காங்கிரசின் மூத்த தலைவர் அஜய் மாக்கன், இளம் பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நரேந்திர மோதியைத் தாக்கிப் பேச வேண்டுமென கூறியதாகவும் கூறிய ஜெயந்தி நடராஜன், தனிப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கிப்பேச தனக்கு விருப்பமில்லை என்றாலும் கட்சி கூறியதற்காக அதைச் செய்ததாகவும் கூறினார்.

Image caption ஜி.கே. வாசன் தனிக்கட்சி துவங்கியபோது, தன்னுடைய நிலைப்பாடு குறித்து காங்கிரசிலிருந்து கேட்டதாகவும் கூறுகிறார் ஜெயந்தி நடராஜன்.

ஜி.கே. வாசன் புதிதாகக் கட்சி துவங்கியபோது, தான் அதில் சென்று சேரப்போகிறேனா என்று கட்சியிலிருந்து கேட்கப்பட்டதாகவும் இத்தனை நாட்கள் தன்னைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, வாசன் கட்சி ஆரம்பிக்கும்போது தன்னை இப்படிக் கேட்டது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்ததாகவும் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

இதற்குப் பிறகே தான் ஊடகங்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டுவர முடிவுசெய்ததாகவும் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

'தூக்கில் தொங்கத் தயார்'

தற்போதைய சூழலில் எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறிய ஜெயந்தி நடராஜன் தன்னுடைய வருத்தமெல்லாம் அகில இந்தியத் தலைமை மீதுதான் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தன்னை மிக நன்றாகவே நடத்தியதாகவும் தெரிவித்தார்.

தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகள் குறித்து தற்போதைய அரசு ஆராயலாம் என்றும் தனக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

தான் தவறு செய்திருந்ததாகத் தெரியவந்தால், சிறைக்குச் செல்லவும் தூக்கில் தொங்கவும் தயாராக இருப்பதாகவும் ஜெயந்தி நடராஜன் கூறினார்.