ராணிப்பேட்டை: கழிவுநீர்த் தொட்டி இடிந்து விழுந்து 10 பேர் பலி

  • 31 ஜனவரி 2015
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 10 பேர் கழிவு நீரில் மூழ்கி பலியாகினர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று காலையில் கழிவு நீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். இவர்களில் 9 பேர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக பொதுச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு நீர் மிகப் பெரிய தொட்டி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொட்டிக்கு அருகிலேயே தொழிலாளர்கள் தங்கும் அறை ஒன்றும் இருந்தது. இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இந்த கழிவுநீர்த் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தொட்டி உடைந்து தொழிலாளர் அறை மீது கழிவுநீர் கொட்டியதில், உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரோடு புதையூண்டனர்.

இதிலிருந்து வெளியேறிய கழிவுநீர், அருகில் இருந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் கூரையில் விழுந்தது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இந்தக் கழிவுநீரில் மூழ்கினர்.

இந்த விபத்தில் பத்துத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இறந்தவர்களின் ஒன்பது பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் சடலங்கள் அரசின் செலவிலேயே அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.