ஓசூர் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து: 9 பேர் பலி

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption காலை 7.35 அளவில் நடந்த இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பெங்களூர் - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12677) ஓசூருக்கு அருகில் உள்ள ஆனேக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டதில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். பலியானவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த ரயிலின் டி - 7, டி -8, டி - 9 பெட்டிகள் அதிகமாக சேதமடைந்துள்ளனர். டி - 9 பெட்டியில் இருந்தவர்களே அதிகம் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சென்று கொண்டிருந்த ஆனேக்கல் - ஓசூர் இடையிலான பகுதி, யானைகள் செல்லும் பகுதி என்பதால், ரயில்கள் மெதுவாகச் செல்லும் பகுதி.

இந்நிலையில், இந்த இடத்தில் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலை 7.35 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம்புரண்டன. ஆனேக்கல்லுக்கு அருகில் உள்ள சாமந்தூர் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. தமிழக எல்லையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தடம்புரண்ட பெட்டிகளை அறுத்து, சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலையில் துவங்கிய மீட்புப் பணிகள் பிற்பகலில் நிறைவடைந்தன. ரயில் இடிபாடுகளில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தை, மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, ஆனந்த குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.