தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆளுனர் பாராட்டு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

  • 17 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தமிழ்நாடு சட்டப்பேரவையில், உரை நிகழ்த்துகிறார் ஆளுனர் ரோசைய்யா.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ரோசைய்யா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், தமிழக ஆளுனர் ரோசையா உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் ரோசைய்யா தன் உரையைப் படிப்பதற்காக எழுந்தபோது, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் எழுந்து பேச ஆரம்பித்தார். ஆனால், அதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.

தி.மு.கவின் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

அவர்களுடன் சிபிஎம்மின் ஏ. சவுந்தரராஜன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் குரல் கொடுத்தனர்.

அவர்கள் பேச அனுமதியளிக்கப்படாததையடுத்து, தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து சிபிஎம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன.

தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசையா தன் உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அதற்குப் பிறகு, உரையை தமிழில் சபாநாயகர் தனபால் வாசித்தார்.

ஆளுனர் உரையின் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

1. கடந்த நான்கு ஆண்டுகளாக, சரியான காலத்தில் எடுக்கப்பட்ட திறன்மிக்க நடவடிக்கைகள் மூலமாக, மாநிலத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

2. தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்திட, தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 42.23 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

3. இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும்.

4. பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் தமது வாழ்வாதாரத்திற்காக அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்.

5. முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை அமைப்பதற்கான சுற்றுச் சூழல்தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து தனது கடும் எதிர்ப்பை தமிழக அரசு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

6. தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி காவேரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், காவேரி ஆற்றின் குறுக்கே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கக்கூடாது என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

7. மின்னணு சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலே முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

8. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன.

9. மத்திய திட்டக்குழுவை கலைத்து, இந்தியாவை மாற்றி அமைப்பதற்கான தேசிய அமைப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு வரவேற்கிறது.

10. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படும்.

11. கடந்த நான்கு ஆண்டுகளில் 2,58,382 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில், 44,402 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது.

இந்த சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்னும் நான்கு நாட்களுக்கு, - புதன், வியாழன், வெள்ளி, திங்கள் - நடைபெறும் என சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு முடிவுசெய்திருக்கிறது.