நீலகிரியில் பெண்ணைக் கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது

  • 18 பிப்ரவரி 2015
Image caption பெண்ணைக் கொன்ற புலி சுடப்பட்டது ( ஆவணப்படம்)

நீலகிரி பகுதியில் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் அந்தப் புலி சுடப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப் படையினர் புலியை சுட்டுக் கொன்றதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அந்தப் புலியால் தாக்கப்பட்ட 34 வயதான மகாலட்சுமி உயிரிழந்தார், அதே நாளில் அதே புலியால் தாக்கப்பட்ட மற்றொரு நபர் கேரளாவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

புலியால் ஏற்பட்ட கிலியால் அந்தப் பகுதியில் இயங்கி வந்த 5 பள்ளிக்கூடங்கள் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்தன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அப்பகுதியில் வேலை புறக்கணிப்பை செய்து வந்தனர். கடந்த ஆண்டும் பொங்கல் திருவிழாவின் போது மனிதனைக் கொன்று தின்ற புலி ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டது.

புலிகள் அழிந்து வரும் உயிரினமாக இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்படும் சில நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் தமிழக – கேரள – கர்நாடக வனப்பகுதியில் தொடர்ச்சியாக இருக்கும் காடுகளில் காணப்படுகின்றன.

வயதான புலிகளும் அடிபட்ட புலிகளுமே மனிதனைக் கொல்ல முற்படுவதாகவும் இவற்றை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட வேண்டுமே தவிற கொன்றழிக்கக் கூடாது என்றுவன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சிலர் வாதிடுகின்றனர்