பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்கக் கோரிக்கை

  • 18 பிப்ரவரி 2015

இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கொல்கத்தாவில் செயல்படும் பாலியல் தொழிலாளர்களுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராக முகமூடி அணிந்து பெங்களூர் நகரில் போராடும் பாலியல் தொழிலாளர்கள்

இந்தியா முழுவதும் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரீக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இத் தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர்.

Image caption சோனாகச்சியில் இருந்து மீட்கப்பட்ட பெண்

இதே கோரிக்கையை வலியுறுத்த நூற்றுக்கணக்கான பெண்கள் கொல்கத்தாவின் பிரதான சாலைகள் வழியாக ஒரு பேரணியை நடத்தினர். சட்டரீதியான அங்கீகாரம் – பாலியல் தொழிலாளர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் என்று எழுதிய பதாகைகளை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமான செயலாக கருதப்படாது.

ஆனால் பாலியல் தொழிலாளர் வாடிக்கையாளர்களை அழைப்பது குற்றம். இந்த சட்டத்தின்கீழ்தான் பெண்கள் மீது வழக்கு போடப்படுகிறது.

சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு பாலியல் தொழிலாளருக்கு 300 ரூபாய் அளவுக்குத்தான் பணம் கிடைக்கிறது. அந்தப் பணத்திலும் போலீசுக்கும், பாலியல் தரகருக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும்.

நாட்டில் உள்ள மிகப் பெரிய பாலியல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சீமா போக்லா, இந்த தொழில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டால் தாங்கள் கண்ணியத்தோடு வாழ வழி பிறக்கும், தங்களுக்குப் பிறர் தொல்லை கொடுப்பது குறையும் மேலும் எங்களின் குழந்தைகளை மற்றவர்கள் கேவலமாகப் பார்ப்பதும் இருக்காது என்கிறார்.

ஆனால் சீமா போக்லா சொல்வது போல செய்தால் – பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்தும் கும்பல்களுக்கு பச்சைக் கொடி காட்டியது போல ஆகிவிடும் என சமூக ஆய்வு மையத்தைச் சேர்ந்த ரன்ஜனா குமாரி வாதிடுகிறார்.

இன்றைய தேதியில் தினந்தோறும் புதிதாக 7 முதல் 8 பெண்கள் பாலியல் தொழில் செய்வதற்காக கொல்கத்தாவின் சேனகச்சிக்கு வருகின்றனர். ஏற்கனவே பலர் இங்கே இருக்கும் நிலையில் இவர்கள் அனைவருக்கும் எப்படி மறுவாழ்வு அளிக்க முடியும் என்பது குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன.