தமிழக சட்டப்பேரவையிலிருந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் தொடர் முழுவதும் நீக்கம்

  • 19 பிப்ரவரி 2015
Image caption அவையிலிருந்து நீக்கப்பட்ட தே.மு.தி.க உறுப்பினர்கள் வளாகத்திற்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையிலிருந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று வெளியேற்றப்பட்டனர். இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க அக்கட்சியினருக்குத் தடைவிதிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில், தே.மு.தி.க. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மோகன் ராஜ் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சில வார்த்தைகளைச் சொன்னார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தே.மு.தி.க. உறுப்பினர் மோகன்ராஜ் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

மோகன் ராஜ் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து, தே.மு.தி.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். சிலர் சபாநாயகர் மேஜையைத் தள்ள முற்பட்டனர். சிலர் கையில் இருந்த காகிதங்களை விசிறியடித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் சபையைவிட்டு வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது அவைக் காவலர்களுடன் தே.மு.தி.க. உறுப்பினர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு பேசிய தனபால், இது ஒரு அசாதாரணமான சூழல் என்றும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறும்படி, அவை முன்னவரான நத்தம் விஸ்வநாதனிடம் கூறினார்.

இதன்பின், தே.மு.தி.க. உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கத் தடைவிதித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மோகன் ராஜ், தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தொடர் மட்டுமல்லாமல் அடுத்த கூட்டத்தொடரிலும் பங்கேற்கத் தடைவிதித்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் சட்டப்பேரவையின் உரிமைக் குழுவுக்கும் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு சில உறுப்பினர்களை அடுத்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்குத் தடைவிதிக்கும் தண்டனை நீக்கப்பட்டது.

சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க. உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர் கிருஷ்ணசாமி அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கொலைசெய்யப்பட்டு 17 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுத்ததால், வெளிநடப்புச் செய்ததாக அவர் தெரிவித்தார்.