பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி ராஜினாமா

  • 20 பிப்ரவரி 2015
Image caption தனக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிரட்டல் விடப்பட்டதாக ஜிதன் ராம் கூறியுள்ளார்.

பிஹார் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

பிஹார் சட்டமன்றம் கூடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக ஆளுனர் மாளிகைக்குச் சென்ற மஞ்சி. தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

பிஹார் சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று ஆளுனர் கேசரி நாத் திரிபாதி உரை நிகழ்த்தவிருந்தார். அதற்குப் பிறகு மஞ்சி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்தது.

தற்போது மஞ்சி ராஜினாமா செய்திருக்கும் நிலையில், ஆளுனரின் உரை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமார், தனது ஆதரவாளரான ஜிதன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.

ஆனால், பிறகு நிதீஷ் குமாருக்கும் ஜிதன் ராமுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. இருந்தபோதும் ஜிதன் ராம் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.

இதையடுத்து, நிதீஷ் குமார் தரப்பும் மஞ்சி தரப்பும் தங்களுக்குத்தான் சட்டமன்றத்தில் அதிக ஆதரவு இருப்பதாக கூறிவந்தன.