நாளந்தா பல்கலை. பதவியை தொடர விரும்பவில்லை: அமர்தியா சென்

  • 20 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை NALANDAUNI.EDU.IN
Image caption அமர்தியா சென் இரண்டாவது தடவையும் பதவியில் தொடர வேண்டும் என்று ஆட்சிக்குழு கோரியிருந்தது

இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவரான, நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞரான டாக்டர் அமர்தியா சென் தான் இரண்டாவது முறையாகவும் அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவுக்கு அவர் எழுதிய ஐந்து பக்கக் கடிதத்திலேயே அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் தேதி நாலந்தா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு இரண்டாவது முறையாகவும் டாக்டர் அமர்தியா சென்-ஐ தலைவராக இருக்கும்படி ஒருமனதாக முடிவுசெய்தது.

இந்த நிலையில் அவர் ஆட்சிக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவில் கல்வி நிர்வாகம் என்பது மிக ஆழமாக ஆளும் கட்சியின் கருத்துகள் சார்ந்து இயங்குவதாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக் குழுவின் முடிவு குறித்து குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்பதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆட்சிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில், கல்வி சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளை எளிதில் அரசியல் முடிவுகளாக மாற்ற முடியும் என்றும் அரசியல்சாசனமே அதை அனுமதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிடம் இருக்கும்போது, இது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறார் பா.ஜ.க. சார்பு அரசியல் ஆய்வாளரான பத்ரி சேஷாத்ரி.

ஆனால், கல்வியாளர்கள் இதில் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான சாதிக், இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் 'காவிமயமாக்கி' வருகிறது என்று குற்றம்சாட்டுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், ஆட்சிக் குழுவின் முடிவு இன்னமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், கிடைத்த பிறகுதான் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நரேந்திர மோடிக்கு எதிராக டாக்டர் அமர்தியா சென் தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியாக பெரிதும் கவனிக்கப்பட்டன. நாடு முழுவதும் விவாதத்தையும் ஏற்படுத்தின.