தமிழகத்தில் கோட்ஸே சிலைகள் நிறுவப்படவில்லை: தமிழக முதல்வர்

  • 20 பிப்ரவரி 2015
Image caption கோட்ஸே சிலை வைக்க மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி அளிக்கவில்லையென சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாதுராம் கோட்ஸேவின் சிலைகள் எந்த ஓர் இடத்திலும் நிறுவப்படவில்லை என்றும் நிலைமையை தமிழக அரசு கூர்ந்து கவனித்து வருகிறது என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா, மகாத்மா காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட நாதுராம் கோட்ஸேவின் சிலை தமிழகத்தில் வைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கூறினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர், அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்ஸேவின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தன்று நாடு முழுவதும் நிறுவப்போவதாக அறிவிப்பு செய்த நிலையில், இந்த அமைப்பில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கோட்சேயின் சிலைகளை அமைக்கப் போவதாக அறிவித்தனர் என்று குறிப்பிட்டார்.

ஆனால், 'இந்தச் சிலைகளை அமைக்க மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறையினர் அனுமதி அளிக்காததையடுத்து, இவ்வமைப்பினர் அறிவித்தது போன்று தமிழகத்தில் கோட்ஸேவின் சிலைகள் எங்கும் நிறுவவில்லை. நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வேறொரு கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், "சாதி மோதல்களை தடுக்கவும், சாதிப் பிரச்சனைகளில் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் தற்போதுள்ள சட்டங்களே போதுமானவையாகும். மேலும் புதியதாக சட்டம் இயற்றத் தேவை எதுவும் தற்போது எழவில்லை" என்று கூறினார்.

முன்னதாக, தங்களுக்குப் பேச வாய்ப்பளிக்காததைக் கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன.