தமிழக முதல்வர்கள் இலங்கைக்கு செல்லாதது ஏன்?

தமிழக முதல்வர்கள் இலங்கைக்கு செல்லாதது ஏன்?
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்
படக்குறிப்பு,

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் நீடித்துவரும் தீஸ்தா நதி நீர் பிரச்சனை தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால், மாநில முதலமைச்சரான மமதா ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட முடியாது.

ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அண்டை நாடு தொடர்பாக பிரச்சனை இருக்கும்போது பயணம் மேற்கொண்டால், அந்தப் பணயம் பிரச்சனையை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்டை நாடான இலங்கையுடன் மீனவர் பிரச்சனை, அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் போன்ற விவகாரங்கள் இருந்தாலும் தமிழக முதலமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ அரசு முறைப் பயணம் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அதிபர் ராஜபக்ஷ கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இலங்கைக்கு வர அழைப்பு விடுத்ததாகத் தெரிவிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்ஸன நாச்சியப்பன்.

ஆனால், அப்போது 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு மட்டுமே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது. அந்தக் குழுவில் தி.மு.க. சார்பில் நான்கு பேரும் காங்கிரஸ் சார்பில் நான்கு பேரும் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தலா ஒருவரும் இடம்பெற்றனர்.

இம்மாதிரி வெளிநாடுகளுக்கு நேரடியாகச் செல்வது பிரச்சனைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தீர்க்க உதவுகிறது என்கிறார் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த சுதர்ஸன நாச்சியப்பன்.

மமதாவைப் போல தமிழக முதலமைச்சர்களும் மத்திய அரசின் அனுமதியைப் பெற்று வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும். குறைந்தது, நதி நீர் பிரச்சனை இருக்கும் அண்டை மாநிலங்களுக்காவது சென்று பேச வேண்டும் என்கிறார் தி.மு.க.வைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

'தமிழகத்தில் எல்லாவற்றையுமே உணர்ச்சிவசப்பட்டு அணுகும் போக்கு இருக்கிறது. வெளிநாட்டினருடன் பேசுவதற்கு இந்தப் போக்கு உதவாது' என்கிறார் மூத்த பத்திரிகையாளரான முராரி.

அரசியல் பிரச்சனைகளுக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது ஒருபுறமிருக்க, இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு, தங்களுடைய மாநிலங்களுக்கு முதலீடுகளைத் திரட்டுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. இருந்தாலும், தமிழக முதலமைச்சர்கள் அம்மாதிரிப் பயணங்களை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருக்கிறது.