சுதந்திரப் போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி காலமானார்

  • 24 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption மாயாண்டி பாரதி, சுதந்திரப் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 13 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழகத்தின் முன்னோடி இடதுசாரித் தலைவர்களில் ஒருவருமான ஐ. மாயாண்டி பாரதி மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

மதுரையில் 1917ல் தனது பெற்றோருக்குப் பதினோராவது குழந்தையாகப் பிறந்த மாயாண்டி பாரதி, 1930களின் துவக்கத்தில் லஜபதிராய் வாலிபர் சங்கம் என்ற அமைப்பைத் துவங்கி, அதன் மூலம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்களில் உதவ ஆரம்பித்தார்.

முதலில் காங்கிரஸ் கட்சியிலும் பிறகு இந்து மகா சபையிலும் இணைந்து செயல்பட்டுவந்த மாயாண்டி பாரதி, பிறகு பொதுவுடமைத் தத்துவத்தில் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைந்த அவர், இறுதிவரை அக்கட்சியில் இருந்தார்.

'ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்'

இரண்டாம் உலகப் போரின்போது போர் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தி, முதன் முறையாக சிறைக்குச் சென்ற மாயாண்டி பாரதி, வெள்ளையனே வெளியேறு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தன் வாழ்நாளில் சுமார் 13 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார்.

அவருக்குப் பிடித்த வாசகமான, 'ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்' என்பது அவருடைய வாழ்க்கையாகவும் இருந்தது.

1960களில் தமிழகம் முழுவதும் இளைஞர்களை மார்க்சிய சித்தாந்தங்களில் ஈர்க்கக்கூடிய நபராக மாயாண்டி பாரதி விளங்கினார் என்று குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஜவஹர்.

மாயாண்டி பாரதி இந்து மகா சபையில் இணைந்து செயல்பட்டதுகூட அவரது பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம்தான் என்கிறார் ஜவஹர்.

நவசக்தி, லோகசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய மாயாண்டி பாரதி 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். இருந்தபோதும், மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் பங்கேற்றுவந்தார்.

கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவிற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது வீட்டில் கீழே விழுந்ததில் இருந்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாயாண்டி பாரதிக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி மாலை ஐந்து மணியளவில் அவர் உயிரிழந்தார்.