குஜராத் கலவரத்தில் பிரிட்டிஷ் பயணிகள் கொல்லப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுவிப்பு

குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்த கலவரத்தில் மூன்று பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆறுபேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஒரு ரயிலில் வந்துகொண்டிருந்த 60 இந்துக்கள் தீயில் கொல்லப்பட்டதையடுத்து குஜராத்தில் வெடித்த கலவரத்தில் ஒரு இந்துக் கும்பல், இந்த மூன்று பிரிட்டிஷ் முஸ்லிம்களையும் உயிரோடு எரித்தது.

இந்தக் கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்தக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் குஜராத் அரசு தவறிவிட்டது என மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டிவருகின்றன.

இம்ரான், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத் ஆகிய மூன்று பிரிட்டிஷ்காரர்களும் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ப்ரஞ்சித் டவுனில் கொல்லப்பட்டனர்.

ஜெய்ப்பூருக்குச் சென்றுவிட்டு குஜராத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இவர்களது கார் கலவரக்காரர்களால் நிறுத்தப்பட்டது.

இந்த மூன்று பேரும் அவர்களது ஓட்டுனரும் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

கொல்லப்பட்ட இந்த மூன்று பேரின் குடும்பத்தினரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக நீண்ட சட்டப்போராட்டத்தை நடத்திவந்தனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு பிரிட்டன் விசா வழங்கக்கூடாது என்று கோரி பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திற்கு மனுவும் செய்திருந்தனர்.

அந்த நேரத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திரமோதி, கலவரங்களைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை மோதி தொடர்ந்து மறுத்துவருகிறார்.

மாநில அளவில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், 2008ஆம் ஆண்டில் மோதி மீது தவறில்லை என்று விடுவிக்கப்பட்டார்.

இந்தக் கலவரங்கள் தொடர்பாக சிலர் தண்டிக்கப்பட்டுமிருக்கின்றனர்.

மோதிக்கு நெருக்கமாக இருந்த மாயா கொத்னானி கலவரத்தின்போது 97 பேரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, 2012ஆம் ஆண்டில், 28 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதே வருடத்தில், மெஹசானா மாவட்டத்தில் கலவரத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரைக் கொன்ற குற்றச்சாட்டில் 22 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.