சமூக ஆர்வலர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி

  • 13 மார்ச் 2015

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி என்பவரை அவசரம் அவசரமாக கைதுசெய்து சிறையில் அடைத்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தனி மனிதராக சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட கட்சி பேனர்களை அகற்றிவந்தார் ராமசாமி (சட்டையின்றி இருப்பவர்).

பொது நலனுக்காக நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தொடுத்திருக்கும் 82 வயதான சமூக ஆர்வலர் கே.ஆர். ராமசாமி என்ற டிராஃபிக் ராமசாமி நேற்று அதிகாலையில் கைதுசெய்யப்பட்டார்.

தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஹோட்டல் அதிபர் வீரமணி என்பவர் அளித்த புகாரின் பேரில் ராமசாமியை காவல்துறையினர் கைதுசெய்து, நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, டிராஃபிக் ராமசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், இவரது நண்பரும் வழக்கறிஞருமான ரவிக்குமார் எனபவர் டிராஃபிக் ராமசாமியின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு மருத்து சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சிவஞானம், டிராஃபிக் ராமசாமியை அவசரம் அவசரமாக கைதுசெய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

உடனடியாக அவரை, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கவும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் யார் யார் என்ற பட்டியலை மூன்று வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

ராமசாமி கைது செய்யப்பட்டபோது மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று குற்றம்சாட்டுகிறார் அவரது நண்பர் ரவிக்குமார்.

சென்னையில் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்படும் கட்சி விளம்பர பேனர்களை, தானாகவே சென்று கத்தியால் கிழித்து அகற்றிவந்தார் ராமசாமி. விதிகளை மீறி பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையையும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

இந்த நிலையில், வேப்பேரில் பேனர்களை அகற்றிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வாகனத்தில் வந்த வீரமணி என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் இருதரப்பும் காவல்துறையில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை ராமசாமியைக் கைதுசெய்தது.

இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ராமசாமியை நேரில் சென்று சந்தித்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவர் கைதுசெய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசும் டிராபிக் ராமசாமி கைது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்.