மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

காவிரி ஆற்றின் குறுக்கில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Image caption தமிழக முதல்வர் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியதும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீர்மானம் ஒன்றை முன் மொழிந்தார்.

பேரவையில் ஒரு மனதாக இன்று நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் செயல்பாட்டிற்கு வரும் வரையில், தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது அணை, நீர்த்தேக்கம் போன்ற எதையும் கட்டக்கூடாது என மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு விரிவான அறிக்கை தயாரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் மத்திய அரசை இந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும் இது தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது குறித்து தற்போதைய தீர்மானத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து சென்று இந்தியப் பிரதமரிடம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தி.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறித்து, அனைத்து விவசாய சங்கங்களும் நாளை அதாவது சனிக்கிழமையன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு, தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன. விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக, நாளை சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இந்த முழு அடைப்புப் போராட்டம் குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சி இந்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.