வாரணாசியில் இணைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குரங்குகள்

  • 4 ஏப்ரல் 2015

வாரணாசி நகரில் இன்டர்நெட் சேவைகளை மேம்படுத்துவதில் மிகப் பெரும் தடையாக, அங்கிருக்கும் குரங்குகள் உருவெடுத்திருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption இந்தக் குரங்குகளைத் துரத்தினால், உள்ளூர்வாசிகள் ஆத்திரமடைவது நிலைமையை மேலும் சிக்கிலாக்கியிருக்கிறது.

வாரணாசி நகரில் இன்டர்நெட் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, அங்கே ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுவருகின்றன.

இந்தியாவிலிருக்கும் 2,50000 கிராமங்களுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இன்டர்நெட் இணைப்பு அளிக்கும் வகையில், 7 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பிராட்பேண்ட் கேபிள்களைப் பதிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

ஆனால், இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை குரங்குகள் கடித்துத் தின்றுவிடுவதால், உத்தரப்பிரதேசத்திலுள்ள அதிகாரிகள் திகைத்துப்போயுள்ளனர்.

"இங்கிருக்கும் கோவில்களை மாற்ற முடியாது. இங்கிருக்கும் எதையுமே மாற்ற முடியாது. இங்கிருக்கும் குரங்குகள் கேபிள்களை நாசம் செய்கின்றன. கடித்துத் தின்று விடுகின்றன" என்று புலம்புகிறார் கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினீயரான ஏபி ஸ்ரீவத்ஸவா.

வாரணாசி இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுவதால், உள்ளூர் மக்களும் இங்கு வரும் யாத்ரீகர்களும் குரங்குகளை புனிதமானதாகக் கருதுகின்றனர்.

இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க வேறு வழியை ஆலோசித்து வருவதாக ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார்.

வாரணாசி நெரிசலான, குறுகலான தெருக்களையுடைய நகரம். கடந்த பல தசாப்தங்களாக பெரிய மாறுதல் எதையும் அடையாத நகரமாக வாரணாசி இருந்துவருகிறது.

வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருப்பதால், பூமிக்கு அடியில் கேபிள்களைப் பதிப்பதும் சிக்கலான காரியமாக இருக்கிறது.

இந்தக் குரங்குகளைத் துரத்தினால், உள்ளூர்வாசிகள் ஆத்திரமடைவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.